36 நிமிடங்களில் 7 மசோதாக்கள் நிறைவேற்றம்... கடும் அமளிக்கிடையே மக்களவையில் அத்தனை வேகம்!
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, மக்களவையில் வெறும் 36 நிமிடங்களில் 7 முக்கிய மசோதாக்கள் விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மாணவர் போராட்டத்தின் போது நடைபெற்ற தடியடி மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் கூச்சல் மற்றும் அமளிக்கு இடையிலும், அவையை ஒத்திவைக்காமல் 36 நிமிட கால இடைவெளியில் வரிசையாக 7 முக்கிய சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
எவ்வித விவாதமும் இன்றி, அவசர அவசரமாகச் சட்ட மசோதாக்களை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மக்கள் நலன் சார்ந்த மற்றும் முக்கியமான சட்டத் திருத்தங்கள் குறித்து விரிவாக விவாதிக்க அவைக்கு வாய்ப்பளிக்காமல், அரசு தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி மசோதாக்களைக் கடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.