திருச்சியில் கோர விபத்து.. மரத்தில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு!

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே துறையூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஜம்புநாதபுரம் பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரமாக இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது.

மரத்தின் மீது வேன் மோதிய வேகத்தில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் பயணம் செய்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 3 பேர் படுகாயம்: விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 3 பேரை அங்கிருந்தவர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

காயமடைந்த மூவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் ஓட்டுநருக்குத் தூக்கக் கலக்கமா அல்லது அதிவேகமா, வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.