நீலகிரியில் கடும் வறட்சி.. 11 நாட்களில் 3 பெண் யானைகள் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, கடந்த 11 நாட்களில் மட்டும் 3 பெண் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எல்-நினோ விளைவு காரணமாக இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாமல் பொய்த்துப்போனது. மலை மாவட்டமான நீலகிரியிலும் சமவெளிப் பகுதிகளுக்கு நிகராக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை இல்லாததால் முதுமலை மற்றும் மசினகுடி வனப்பகுதிகளில் உள்ள ஆறு, ஓடை, குளம் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளன.
தாகம் தணிக்கத் தண்ணீரும், உண்பதற்குப் பசுமையான தீவனமும் கிடைக்காமல் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் தவித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவைத் தேடி வனப்பகுதிகளில் நீண்ட தூரம் அலைந்து திரியும் யானைகள், சத்துக்களின்றிப் பலவீனமடைந்து வருகின்றன.
வறட்சியின் தாக்கம் தாங்க முடியாமல் கடந்த 11 நாட்களில் 3 பெண் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகளைக் காப்பாற்ற வனத்துறையினர் உடனடியாக வனப்பகுதிக்குள் தொட்டிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யவும், போதிய உணவு வசதிகளை ஏற்படுத்தவும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.