ஸ்பாவில் பாலியல் தொழில்.. 3 பெண்கள் மீட்பு, மேலாளர் கைது!

 

மராட்டிய மாநிலம் நவி மும்பையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடத்தி வந்த ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 3 பெண்களை மீட்டு மேலாளரைக் கைது செய்தனர்.

நவி மும்பையின் கார்கர் பகுதியில் இயங்கி வந்த பிரபல ஸ்பாவில், மசாஜ் மையத்தின் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக மனித கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலை உறுதி செய்யப் போலீசார் தரப்பிலிருந்து வாடிக்கையாளர் போல ஒருவர் அந்த ஸ்பாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குப் பாலியல் தொழிலுக்காகப் பேரம் பேசப்பட்டது உறுதி செய்யப்பட்டதும், போலீசார் உள்ளே புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது சட்டவிரோத தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் போலீசாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஸ்பாவின் மேலாளரான ஆரிப் அஜீஸ் மன்சூரி (35) என்பவரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஸ்பாவின் பெண் உரிமையாளர் மற்றும் அவரது கூட்டாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகள் மற்றும் மனித கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.