சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... ஜெம் வீரமணி உட்பட 3 பேர் அறிவுரை குழுமத்தில் நேரில் ஆஜர்!
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பதியப்பட்டுள்ள குண்டர் சட்டம் தொடர்பான விசாரணைக் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை குழுமத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான தொழிலதிபர் ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் உள்பட 8 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களில் ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய மூன்று பேர் மீதும் கடுமையான 'குண்டர் தடுப்புச் சட்டம்' பாய்ந்துள்ளது. இதனையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள குண்டர் சட்ட அறிவுரை குழுமத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் உள்ளிட்ட மூன்று ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் முன்னிலையில் இம்மூவரும் நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முதலில் தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் தனியாகவும், அதனைத் தொடர்ந்து மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தியிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மதியம் 2:30 மணிக்குத் தொடங்கிய இந்த விசாரணை சுமார் 40 நிமிடங்கள் நீடித்து 3:10 மணியளவில் நிறைவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் மூவரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அங்கிருந்து இறக்கி விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகத் காவல்துறையினர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "குற்றச்சாட்டில் தொடர்பு இல்லாத அர்ச்சனாவை விமானத்திலிருந்து இறக்கி நீண்ட நேரம் அலுவலகத்தில் காத்திருக்க வைத்ததால் மயங்கி விழுந்தார்; இது மனித உரிமை மீறல்" என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில், வெளிநாடு செல்வதை அறிந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த மனு குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.