ஓடும் காரில் 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை... !
அசாம் மாநிலம் கூச்சர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த 3ம் தேதி இரவு இரண்டு சிறுமிகளைக் காரில் கடத்திச் சென்றுள்ளனர். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 2 சிறுமிகளையும் காரில் வைத்து இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு அந்தச் சிறுமிகளை ஆள்நடமாட்டமற்ற பகுதியில் காரில் இருந்து இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
நடந்த கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று உரிய புகார் அளித்துள்ளனர். சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜ்மல் ஹசன் லஷ்கர் (வயது 20), சதாம் ஹுசேன் லஷ்கர் (வயது 23), ரிங்கு தாஸ் (வயது 25) ஆகிய 3 இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று இளைஞர்களிடம் இது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.