சிறுமிகளை சீரழித்த தொழிலதிபர் வீரமணி... “குற்றவாளிகள் யாரையும் விடக்கூடாது” என முதலமைச்சர் விஜய் உத்தரவு!
ஏழை மாணவிகளுக்கு உதவி செய்வது போல் நடித்து 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி மீதான வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகள் எவரையும் தப்பவிடக் கூடாது எனத் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கறார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழங்கிய பென்டிரைவ் மூலம், தொழிலதிபர் வீரமணி (வயது 84) சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாயின. இதனைக் கண்டறிந்து விபசார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.
தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துச் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் மூலமாகப் பல சிறுமிகளை வீரமணிக்கு விருந்தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த சாந்தி தம்பதியினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உள்ள வீரமணியை நீதிமன்ற அனுமதியுடன் 3 நாள் காவலில் எடுத்து, பெண் காவல் அதிகாரிகள் புழல் சிறையிலேயே வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஆசிரமங்கள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு நிதி உதவி வழங்குவதாகக் கூறி பல சிறுமிகளை அவர் சீரழித்ததும், உல்லாசத்திற்காக போயஸ் கார்டனில் ரூ.2 லட்சத்திற்குப் பங்களா வாடகைக்கு எடுக்கப்பட்டதும் அம்பலமானது.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜை இரண்டு முறை நேரில் அழைத்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் எவரும் தப்பக் கூடாது என்றும் அவர் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.