"எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை.. போதை கலாசாரம்..” மேடையிலேயே பிரேமலதா போட்ட 'குண்டு' - திமுக தொண்டர்கள் செம ஷாக்!
சேலத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய பேச்சு, திமுகவினரை ஒரு நிமிடம் 'திக் திக்' என்று ஆக்கிவிட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முதல்முறையாகப் பேரணியில் நடந்து வந்த அனுபவத்தைப் பகிர்ந்த பிரேமலதா, "முதல்வர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கக் காரணம் அவரது நடைபயிற்சி தான். பேரணியில் நான் ஒரு பெண் மட்டுமே இருந்த நிலையில், ஒவ்வொரு நிமிடமும் எனது பாதுகாப்பை உறுதி செய்த முதல்வர் தான் பெண் இனத்தின் உண்மையான பாதுகாவலர்" எனப் புகழ்ந்து தள்ளினார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மேடையில் இருந்த திமுக்கியினரை அதிர்ச்சியில் உறைய வைத்தார் பிரேமலதா. "தமிழகம் முழுக்க அண்ணன் ஸ்டாலின் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர இந்த ஆட்சியின் மேல் வேறு எதுவும் சொல்ல முடியாது" என்று அவர் அதிரடியாகப் பேசினார்.
கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சியில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டியதைக் கேட்ட உடன்பிறப்புகள், "இப்படி ஓப்பனாகவே சொல்லிட்டாங்களே!" எனத் திகைத்துப் போயினர்.
குறையைச் சொன்ன கையோடு, "ஒரு சகோதரியாக நான் அண்ணனுக்கு வலது கரமாக இருப்பேன்; பெண்களுக்கு ஏதேனும் என்றால் முதல்வரிடம் உரிமையோடு பேசுவேன்" என சமரசம் செய்தார் பிரேமலதா.
அனைத்து இடங்களிலும் சிசிடிவி மற்றும் பாதுகாப்பை முதல்வர் நிச்சயம் உறுதி செய்வார் எனத் தெரிவித்த அவர், தமிழகத்திற்கு ஒரு ஆபத்து என்றால் பெண்கள் அனைவரும் ஜான்சிராணியாக மாறி இந்த ஆட்சிக்குத் துணையாக நிற்போம் என்றும் சூளுரைத்தார். புகழும் புகாரும் கலந்த பிரேமலதாவின் இந்த ஸ்பீச், சேலம் ஏரியாவில் இப்போதும் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது!