4 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை, பிளாக்மெயில்... அடுத்தடுத்து 2  சகோதரிகள் தற்கொலை !

 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர்   மாவட்டத்தில், ஒரு கும்பலால் தொடர்ந்து 4 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை மற்றும் பணப் பறிப்புக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு உடன்பிறந்த சகோதரிகள், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட மாபெரும் சோகச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினரின் அலட்சியமே இந்த இரண்டு உயிர்களின் இழப்புக்குக் காரணம் எனக்கூறி பொதுமக்கள் தற்பொழுது தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோத்பூர் கிராமப்புற பகுதியான கேடாபா காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை இருவருமே இந்த கொடூர வலைப்பின்னலில் சிக்கியுள்ளனர். ஈ-மித்ரா (e-Mitra) சேவை மையம் நடத்தி வந்த மகிபால் மற்றும் அவனது நண்பர்கள், மூத்த சகோதரியை ஏமாற்றி ரகசியமாக ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளனர். இதனை வைத்து அவரை மிரட்டி, கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததோடு லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளனர். இந்த அச்சுறுத்தலைத் தாங்க முடியாமல், கடந்த மார்ச் 20ஆம் தேதி மூத்த சகோதரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அக்காவின் மரணத்திற்குப் பிறகு, அதே கும்பல் இளைய சகோதரியையும் குறிவைத்துள்ளது. மூத்த சகோதரியின் ஆபாச வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, அவரையும் பல்வேறு விடுதிகளுக்குக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட இளைய சகோதரி கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி காவல் நிலையத்தில் 8 பேர் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தார். தங்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் தானும் உயிரை மாய்த்துக் கொள்வேன் என எஸ்பி   அலுவலகத்திற்கும் எழுத்துப்பூர்வமாக எச்சரிக்கை அனுப்பியிருந்தார்.

ஆயினும், போலீசார் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த மே 15 அன்று அந்தப் பெண் அக்கிராமத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியின் மீது ஏறி, தன் கண் முன்னரே பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தத் துயரச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உள்ளூர் ராஜ்புத் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பாகத் திரண்டு உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜோத்பூர் கிராமப்புற எஸ்பி பி.டி. நித்யா (PD Nitya) உத்தரவின் பேரில், முக்கியக் குற்றவாளிகளான மகிபால் மற்றும் கோபால் ஆகிய இருவர் தற்பொழுது அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக இருந்த உள்ளூர் புறக்காவல் நிலைய பொறுப்பாளர் ஏஎஸ்ஐ தர்மேந்திரா தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டமும் காவல் துறையும் உரிய நேரத்தில் தங்களைக் காக்கத் தவறிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.