பாலியல் புகார்... தவெக மாவட்டச் செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்!

 

தவெக ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் 'விஜய்' மோகன் மீது அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் தொல்லை புகார்களை அளித்துள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாகத் தனக்குத் தொடர்ந்து தவறான நோக்கத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாதவிடாய் காலங்களில் கூடத் தனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான தொல்லைகளைக் கொடுத்து, எல்லை மீறி நடந்துகொள்ள முயன்றதாக அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இன்ஸ்டாகிராம் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இந்த விவகாரத்திற்கு கூடுதல் ஆதாரமாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கட்சியின் தலைமைக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி வரும் தவெகவில் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், தவறு உறுதியானால் விஜய் மோகன் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனத் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் மீதான இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.