தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்... புகாரைத் திரும்ப பெற பெண் நிர்வாகிக்குக் கொலை மிரட்டல் - ஐஜியிடம் மனு!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மீது பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அக்கட்சியின் பெண் நிர்வாகி மதுரை தென்மண்டல ஐஜியிடம் நேரில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினரான ரோகிணி, கட்சியின் நகரச் செயலாளர் நிவாஷ் கண்ணன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரின் நண்பர் ரூஸ்வெல்ட் ஆகியோர் தனது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசச் செய்திகளை அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துத் தவெக மாவட்டச் செயலாளர் பிரைட்டரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால் தூத்துக்குடி எஸ்பியிடம் ஏற்கனவே புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

எஸ்பியிடம் அளித்த புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பிரைட்டர் அனுப்பியதாகக் கூறி மகாராஜன் என்ற வழக்கறிஞர் இரவில் வீட்டிற்கு வந்து மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். மறுநாள் பிரைட்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, புகார்களை வாபஸ் பெறுவதாக வெற்றுக் காகிதங்களில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதுடன், மாவட்டச் செயலாளருக்குச் சால்வை அணிவிக்க வைத்துப் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர்.

"எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் தூத்துக்குடியில் வாழவிட மாட்டோம்" எனக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், சமூக வலைதளக் குழுக்களில் புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும் ரோகிணி தெரிவித்துள்ளார். தமக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் பிரைட்டர், நிவாஷ் கண்ணன், மகாராஜன், போர்ஜியா, வளன் மற்றும் ரூஸ்வெல்ட் ஆகியோர் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் அவர் மனு அளித்துள்ளார்.