தவெக மாவட்டச் செயலாளர் சத்யா மீது பாலியல் தொந்தரவு, பண வசூல் புகார் - தவெக அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்யா மீது பாலியல் தொந்தரவு மற்றும் கட்சிப் பதவிகளுக்காகப் பணம் வசூலித்தது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகப் பெண் நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி தொகுதி மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் தரப்பில், மாவட்டச் செயலாளர் சத்யாவின் செயல்பாடுகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. கட்சியில் பணியாற்றும் பெண் நிர்வாகிகளிடம் மாவட்டச் செயலாளர் சத்யா தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, கட்சியில் பல்வேறு பொறுப்புகள் மற்றும் பதவிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் சத்யா பணம் வசூலித்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளரின் இத்தகைய செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகிகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து, சத்யாவுக்கு எதிரான ஆதாரங்களுடன் புகார் மனுவை அளித்துள்ளனர்.
ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மீதே அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் பாலியல் மற்றும் ஊழல் புகார் அளித்துள்ள சம்பவம், திருவண்ணாமலை மாவட்ட அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்புகாரின் அடிப்படையில் கட்சித் தலைமை எத்தகைய ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.