வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... மென்பொருள் பொறியாளர் தலைமறைவு!

 

ஐதராபாத்தில் தனது காதலனுடன் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குப் பயந்து தலைமறைவான அந்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த தனது காதலனைச் சந்திப்பதற்காகக் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார். இருவரும் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில், காதலனின் நண்பரான பீகாரைச் சேர்ந்த 'ஆதித்யா ஆனந்த்' என்ற மென்பொருள் பொறியாளரும்அதே வீட்டில் தங்கியிருந்துள்ளார். காதலன் வீட்டில் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி, அந்த இளம்பெண்ணிடம் ஆதித்யா ஆனந்த் தொடர்ச்சியாக அத்துமீறியும், தவறாக நடக்க முயன்றும் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 17-ம் தேதி வீட்டின் சமையலறையில் இளம்பெண் இருந்த போது, ஆதித்யா ஆனந்த் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலன் வீட்டிற்குள் வந்ததால் தப்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக நெதர்லாந்து திரும்பியதும் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் இது குறித்துப் புகார் அளித்தார்.

தூதரகப் வழிகாட்டலின்படி மீண்டும் இந்தியா வந்த அந்த இளம்பெண், ஜூலை 22-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல் நிலையத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆதித்யா ஆனந்த் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுத்ததை அறிந்ததும், ஆதித்யா ஆனந்த் தனது செல்போனை அணைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.