பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு.. ஹாஸ்டல் வார்டன், இயற்பியல் ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு!

 

 

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவிகளுக்கு நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் நேரடியாக ரகசியப் புகார் அளித்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் விடுதி வார்டன்  உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தியபோது, ஆசிரியர் ராஜ்குமார் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி முதல்வரிடம் புகார் அளித்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜ்குமாரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.