நடிகைக்குப் பாலியல் தொல்லை... இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன்; பாஸ்போர்ட் பறிமுதல்!

 

இளம் நடிகை ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவர் வெளிநாடு செல்ல முடியாதபடி பலத்த கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, கொச்சி துறைமுகப் பகுதியில் தனது படத்தில் நடிப்பதற்காக வந்த ஓர் இளம் நடிகையிடம் இயக்குநர் ரஞ்சித் அநாகரிகமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேரளப் போலீசார் ரஞ்சித்தை அதிரடியாகக் கைது செய்து எர்ணாகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

முன்னணி இயக்குநர் ஒருவர் இது போன்ற புகாரில் சிக்கிச் சிறை சென்றது மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் இருந்த ரஞ்சித் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்ற நீதிபதி கே.கே. பாலகிருஷ்ணன், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஆனால், பின்வரும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஞ்சித் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்; அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் கொச்சி துறைமுகப் பகுதிக்கு அவர் செல்லக் கூடாது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசாரணை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். மேலும், விசாரணைக்காக எப்போது அழைத்தாலும் உடனடியாக ஆஜராக வேண்டும்.

பாதிக்கப்பட்ட நடிகையிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீன் கிடைத்தாலும், ரஞ்சித் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் கடுமையான தண்டனையைச் சந்திக்க நேரிடும் எனச் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.