17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கால்பந்து பயிற்சியாளர்... பகீர் !
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் பகுதியில் விளையாட்டு உலகையே உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள ஒரு தனியார் கால்பந்து பயிற்சி மையத்தில் படித்து வந்த 17 வயது இளம் சிறுமி ஒருவரை, அந்த மையத்தின் பயிற்சியாளரான அபிஜித் மண்டல் (36) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியின் நம்பிக்கையைப் பெற்று இந்த கொடூர செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பயிற்சியாளர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகளைத் தனது கேமராவில் ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்து வைத்துள்ளார். நாளடைவில் அந்த சிறுமி அவரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியபோது, அந்த ரகசிய வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி அடுக்கடுக்கான மிரட்டல்களை விடுத்து வந்துள்ளார். இந்த தொடர் மிரட்டல்களால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, இறுதியில் தனது குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே இந்த விபரீத கொடுமைகளைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக மணிக்பூர் காவல் நிலையத்திற்குச் சென்று அவருக்கு எதிராகப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த பயிற்சியாளர் அபிஜித் மண்டலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். விளையாட்டுப் பயிற்சிக்குச் சென்ற பச்சிளம் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.