இளம்பெண்ணுக்கு காங்கிரஸ் கவுன்சிலர் பாலியல் தொல்லை.. தென்காசியில் அதிர்ச்சி!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரிநாராயணன். 55 வயதான வழக்கறிஞரான இவர், பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவராகவும், மருதம்புத்தூரில் இயங்கி வரும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மேலும் இவர் அந்தப் பகுதியின் ஒன்றிய கவுன்சிலராகவும், ஆலங்குளம்-அம்பை சாலையில் உள்ள அரசு உதவிபெறும் சொசைட்டி ஒன்றின் நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
அரிநாராயணன் நிர்வகித்து வந்த இந்த சொசைட்டியில் இளம் பெண் ஒருவர் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அரிநாராயணன் தொடர்ந்து கடுமையான பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே விரிவாகக் கூறியுள்ளார்.
மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அந்தப் பெண்ணுடன் சென்று ஆலங்குளம் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். இளம்பெண் கொடுத்த அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அரிநாராயணன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரைக் காவல் துறையினர் ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.