பரபரப்பு... சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுக் கொலை!
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானஸ் மாவட்டம் சூர்யபூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, கடந்த 4 ம் தேதி மாலை தனது தோழியின் பிறந்தநாள் விழாவுக்குப் பரிசு வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அவளைக் கடத்திச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் அந்தச் சிறுமியைத் கொடூரமாகக் கொலை செய்து, அவளது உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி குளத்திற்கு அருகே வீசிவிட்டுத் தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளில் ஒருவனைப் பொதுமக்களே பிடித்து அடித்துக் கொன்றனர். மேலும் தலைமறைவாக இருந்த அனந்த சர்தார், பிரபேஷ் மிண்டல், திபகர் சர்தார் ஆகிய 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடிக் கைது செய்தனர். இவர்களுள் இந்த கொடூரமான குற்றச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பிரபேஷ் முண்டல் என்பவன் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபேஷ் முண்டலை, இன்று நள்ளிரவில் விசாரணை மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பதற்காகப் போலீசார் குற்றம் நடந்த சம்பவ இடத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் போலீசாரைத் தாக்கிவிட்டுப் பிரபேஷ் முண்டல் தப்பியோட முயன்றதால், தற்காப்புக்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.