"லிஸ்ட்டை வெளியிடட்டுமா?" - அமைச்சர் நிர்மல்குமாருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் விவாதங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், தற்பொழுது சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இடையேயான நேருக்கு நேர் மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியமைக்க ஆதரவு கோரிய விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பொதுவெளியில் மாறி மாறிப் பேசிக்கொள்வது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்துச் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமைச்சரே, கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியாகி நீங்கள் ஆட்சியமைப்பதற்காகத் திரைமறைவில் யார் யாரையெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டீர்கள்? யாரிடமெல்லாம் ஆதரவு கேட்டுப் பேசினீர்கள் என்ற முழுப் பட்டியலும் என்னிடம் உள்ளது. அந்த லிஸ்ட்டை நான் தற்பொழுது பொதுவெளியில் வெளியிடட்டுமா? அதை விடுத்து ஊடகங்களுக்கு முன்னால் இதுபோன்ற ‘அரசியல் ஸ்டண்ட்'-களை செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள்" எனக் காட்டமாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்து வரும் நிலையில், தற்பொழுது பாஜக தலைவரின் இந்த 'போன் கால்' லிஸ்ட் குறித்த அதிரடி எச்சரிக்கை புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி தவெக அரசு பதவியேற்பதற்கு முன்னால், திரைமறைவில் நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகள் என்னென்ன என்பது குறித்த விவாதங்கள் இதன் மூலம் மீண்டும் எழுந்துள்ளன. நயினார் நாகேந்திரனின் இந்த நேரடிப் பதிலடிக்குத் தவெக தரப்பிலிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகள் வரப்போகின்றன என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.