முடிவுக்கு வந்தது இழுபறி... சி.வி. சண்முகம் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பு!
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம், இன்று (மே 11) தமிழகச் சட்டமன்ற உறுப்பினராக முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். முன்னதாக இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவைப் புறக்கணித்திருந்த அவர், பின்னர் தனிப்பட்ட முறையில் சபாநாயகர் அறைக்கு வந்து தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றுக் கொண்டதற்கான அதிகாரப்பூர்வத் தகவலைச் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் முறைப்படி வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 232 உறுப்பினர்கள் வரிசையாகப் பதவியேற்ற போது, சி.வி. சண்முகம் மட்டும் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அவர் கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் பதவியேற்றுள்ளது அந்தப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தற்காலிகச் சபாநாயகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவர் முறைப்படி உறுதிமொழி எடுத்துக்கொண்டு உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
சி.வி. சண்முகத்தின் இந்தப் பதவியேற்பைத் தொடர்ந்து, 17-வது சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் முறைப்படி தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். நாளை நடைபெற உள்ள சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்தலிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மணி நேரங்களாக நிலவி வந்த அரசியல் சஸ்பென்ஸ், அவர் பதவியேற்றதன் மூலம் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.