சரத்பவார் உடல்நிலைக் கவலைக்கிடம்... மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
கடந்த சில மாதங்களாகவே சரத்பவார் உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 85.
சரத்பவாருக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால், அவர் நேற்று புனேயில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மேலும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரத்பவார் ஏற்கனவே உடல்நலக் குறைவு காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த பிப்ரவரி 14ம் தேதி தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.