கெனிஷாவுக்கு ரூ.1,29,874 அபராதம் விதித்தது ஷார்ஜா நீதிமன்றம்!

 

நடிகர் ரவி மோகனின் தோழியான கெனிஷாவுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நீதிமன்றம் 5,000 திர்ஹம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியப் பெண்ணான ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, கெனிஷா தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவதூறான கருத்துக்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பில் ஷார்ஜா நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக வழக்கும் தொடரப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான இணையக் குற்றச் சட்டங்களின் கீழ் , சமூக வலைதளங்களில் பிறரை அவதூறு செய்வது மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது ஆகியவை கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அவதூறு வழக்கை விரிவாக விசாரித்த ஷார்ஜா நீதிமன்றம், கெனிஷா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, கெனிஷாவுக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.1,29,874 ஆகும். பிரபலங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்குச் சர்வதேச நீதிமன்றம் அவதூறு வழக்கில் அபராதம் விதித்துள்ள இந்தச் சம்பவம், தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.