ஷிகெல்லா அச்சம்?...  அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி விடுதியில் ஒ  தங்கிப் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நேற்று இரவு வழங்கப்பட்ட உணவை வழக்கம்போல ஆசையோடு சாப்பிட்டுள்ளனர். உணவைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அங்கிருந்த மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

விடுதி உணவைச் சாப்பிட்ட மொத்தம் 25 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் திடீரென கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் தொடர் வாந்தி போன்ற நச்சு அறிகுறிகள் மிகத் தீவிரமாகத் தென்பட்டன. இதனால் ஒட்டுமொத்த விடுதி வளாகமும் பெரும் பதற்றமடைந்தது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 25 மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டுத் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.   கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்த மாணவர்களுக்கும் அந்தப் பாதிப்பு இருக்குமோ என்ற புதிய பீதி எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள், விபரீதத்திற்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படும் விடுதிச் சமையலறைக்கு விரைந்து சென்று உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவின்படி, விடுதியில் தற்காலிகமாக வெளி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுத் தூய்மைப் பணிகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கும் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.