சிவசேனா தலைவர்  வெட்டிப் படுகொலை... தாமிரபரணி ஆற்றில் சடலம் மீட்பு!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலத்தின் அடியில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் காவல் துறையினர் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு உடலைக் கைப்பற்றினர். சடலத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவரது உடலில் சிவசேனா கட்சியின் சின்னம் பச்சை குத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவசேனா நிர்வாகிகளை அழைத்துச் சடலத்தைக் காட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளை பகுதியைச் சேர்ந்த சுதீசன் மகன் 32 வயதான அதுல் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கேரள மாநிலச் சிவசேனா கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் என்பதும் உறுதியானது. இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர்  பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் மர்ம நபர்கள் சிலர் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தாமிரபரணி ஆற்றில் உடலை வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதனிடையே கொலை செய்யப்பட்ட அதுலின் வாகனம் சிதறால் மலைக்கோயில் அருகே கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.