நாடு முழுவதும் அதிர்ச்சி... ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - ஓட்டுநர், நடத்துநர் கைது!

 

தலைநகர் டெல்லி அருகே ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து நொய்டாவில் உள்ள தனது உறவினரைச் சந்திக்கச் சென்ற 16 வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாகத் தவறுதலாகப் பரி சௌக் பகுதியில் இறங்கியுள்ளார். வழித்தவறி நின்று கொண்டிருந்த அந்தச் சிறுமி, காலியாக வந்த ஸ்லீப்பர் பேருந்தைச் சைகை காட்டி நிறுத்த, ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர் உதவி செய்வதுபோல் கூறி அவரைப் பேருந்தில் ஏற்றியுள்ளனர்.

ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து வழித்தவறிய சிறுமிக்கு உதவுவது போல் நடித்து, காஷ்மீர் கேட் அருகே அவரை இறக்கி விடுவதற்குள் சுமார் 47 கிலோமீட்டர் தூரப் பயணத்தில் இருவரும் மாறிமாறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளனர்.

இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தடயவியல் பரிசோதனைகளுக்காக அந்த ஸ்லீப்பர் பேருந்தும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.