நாடு முழுவதும் அதிர்ச்சி... புனே கொலை வழக்கில் சியா மற்றும் காதலனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு!
புனே லோகாட் கோட்டையில் 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால் 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவளது காதலன் சேதன் சவுத்ரி ஆகிய இருவரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப் புனே மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்து மரணம் என்று நாடகமாடி வந்த இருவரும், காவல் துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகப் புனே ஊரகக் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் சிங் கில் தெரிவித்துள்ளார். லோனாவாலா ஊரக காவல் துறையினர் இக்கொலை வழக்கின் பின்னணியில் உள்ள கூடுதல் ஆதாரங்களைத் திரட்டவும், மேலதிக விசாரணைக்காகவும் இவர்களைக் காவலில் கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
காவல் துறையின் தற்போதைய புலனாய்வு விசாரணையில் இந்தச் சதித்திட்டம் குறித்துப் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. கேதனும் சியாவும் மே 31 அன்று முதன்முதலாக லோகாட் கோட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் கேதனைத் தீர்த்துக்கட்ட சியா முதன்முதலில் திட்டம் தீட்டியுள்ளார்.
ஜூன் 14 அன்று கேதனை மீண்டும் கோட்டைக்கு வரவழைத்து, அங்குக் "பாம்பு வந்துவிட்டது" எனப் பீதியை ஏற்படுத்தி அவரைப் பள்ளத்தில் தள்ளியுள்ளார். ஆனால், கேதன் எவ்விதக் காயமுமின்றி தப்பித்துள்ளார். முதல் முயற்சி தோல்வியடைந்ததால், ஜூன் 18 அன்று காதலன் சேதன் சவுத்ரியையும் கோட்டைக்கு வரவழைத்து, இருவரும் சேர்ந்து கேதனைப் பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்த ஜூன் 18 அன்று, தனது இருப்பிடத்தைக் காவல் துறை கண்டறிவதைத் தவிர்க்கச் சேதன் சவுத்ரி சாமர்த்தியமாகத் தனது கைபேசியைக் கடையிலேயே ஊழியர்களிடம் விட்டுவிட்டு, ஊழியரின் கைபேசியை எடுத்துக்கொண்டு கோட்டைக்குச் சென்றுள்ளார். மேலும் அன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5.40 மணி வரை அவரது இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த 6 மாதங்களில் சியாவுடன் அவர் 2,004 முறை (சுமார் 238 மணி நேரம்) பேசிய தொலைபேசி தரவுகள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள் மூலம் காதலனின் நடமாட்டத்தைப் போலீசார் துல்லியமாக உறுதி செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். தற்போது 7 நாட்கள் போலீஸ் காவல் கிடைத்துள்ளதால், இக்கொலையில் சியாவின் குடும்பத்தினருக்குப் பங்கு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.