அடுத்தடுத்து அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியப் பெருங்கடல், மியான்மர், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பயங்கர நிலநடுக்கம்!

 

இன்று அதிகாலை முதல் ஆசியப் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பெருங்கடல் என மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த இயற்கைச் சீற்றம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 4:29 மணி அளவில் மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.0 ஆகப் பதிவானது. நைபிடாவிலிருந்து 137 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 140 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

மியான்மரைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில், சரியாக அதிகாலை 5:29 மணி அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இவை அனைத்தையும் விட வலுவான நிலநடுக்கம் இன்று காலை 8:10 மணி அளவில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.9 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ ஆழத்திலேயே மையம் கொண்டிருந்ததால், இதன் தாக்கம் சற்று அதிகமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டிடச் சிதைவுகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த அதிர்வுகள் புவியியல் ரீதியான மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளன.