அடுத்தடுத்து அதிர்ச்சி... நேற்று செங்கல்பட்டு.. இன்று திருவள்ளூர்... அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருவள்ளூர் அடுத்த கொட்டையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்ததால், அதனை உட்கொண்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இ்ப்பள்ளியில் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கம் போல் மாணவர்களுக்குக் காலை உணவு பரிமாறப்பட்ட நிலையில், மாணவர்கள் அதனைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவரின் உணவில் பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அனைத்து மாணவர்களும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர்.
உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படக்கூடும் என்பதால், மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சையும் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்களிலேயே இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்டு 15 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று திருவள்ளூரில் 30க்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.