கரூரில் மீண்டும் அதிர்ச்சி... நாளை முதல்வர் விழாவிற்கான பந்தல் பணியில், கிரேன் பெல்ட் அறுந்து விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்!
தமிழக முதல்வர் விஜய் நாளை கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உதவித் திட்டக்கள் வழங்க உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த பணியின் போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
கரூரில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகமும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளும் இதற்கான விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர்.
கரூர் விழா மைதானத்தில் இரும்புத் தூண்களைக் கொண்டு பந்தல் அமைக்கும் பணிகள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து அரங்கேறியது. ராட்சத இரும்பு ராடு ஒன்றை மேலே தூக்கிக் கட்டுவதற்காகக் கிரேன் பயன்படுத்தப்பட்டது. அப்போது திடீரென கிரேனின் பலத்த பெல்ட் பயங்கர சத்தத்துடன் அறுந்துபோனது.
பெல்ட் அறுந்த வேகத்தில், டன் கணக்கிலான கனரக இரும்பு ராடு அப்படியே கீழே விழுந்து நொறுங்கியது. அந்த ராடிற்கு மிக அருகிலேயே பந்தல் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், கண் இமைக்கும் நேரத்தில் சுதாரித்துக் கொண்டு ஓடியதால் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினர்.
இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, விழா மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனரக இரும்புச் சட்டங்களை வைத்து வேலை செய்யும் போது, தொழிலாளர்களுக்குத் தேவையான ஹெல்மெட், பாதுகாப்பு உடைகள் அல்லது இதர அவசரக்கால உபகரணங்கள் எதுவும் வழங்கப்படாமல் ஆபத்தான முறையில் அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அங்கே குழுமியிருந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முதலமைச்சர் பங்கேற்கும் முக்கிய நிகழ்வு என்பதால், அதிகாரிகள் உடனடியாகப் தலையிட்டுப் பணிகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனப் கோரிக்கை எழுந்துள்ளது.