தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... தூத்துக்குடியில் எஸ்.ஐ. மகள் கொன்று புதைப்பு!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மகள் அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாகப் பக்கத்து வீட்டுத் தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிருந்தா தேவி. இவருடைய கணவர் கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிருந்தா தேவியின் வீட்டுக்கு அருகில் மாரிமுத்து - சரவண பிரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.

கணவர் வெளிநாட்டில் இல்லாததைச் சாதகமாக்கிக் கொண்டு, மாரிமுத்துவுக்கும் பிருந்தா தேவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி, மாரிமுத்துவின் மனைவி சரவண பிரியா வெளியில் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பிருந்தா தேவியை மாரிமுத்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகச் சரவண பிரியா திடீரென வீட்டிற்குத் திரும்பியுள்ளார். கணவர் பக்கத்து வீட்டுத் தோழியுடன் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பிருந்தா தேவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியதில், சரவண பிரியா பிருந்தா தேவியை அடித்துக் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பிருந்தா தேவி மயக்கமடைந்து விழுந்துள்ளார். பிருந்தா தேவி உயிருடன் இருந்தால் மீண்டும் இந்தத் தொடர்பு தொடரும் என்று ஆத்திரமடைந்த சரவண பிரியா, தனது கணவர் மாரிமுத்துவுடன் சேர்ந்து, மயக்கத்திலிருந்த பிருந்தா தேவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு உடலை மதியம் வரை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்த தம்பதியினர், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் குறைந்தவுடன் சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டியுள்ளனர். பின்னர், தூத்துக்குடிக்கு வெளியே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று, குழி தோண்டிப் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

மகளைக் காணவில்லை என்று பிருந்தா தேவியின் தந்தையும், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான செல்லதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், பிருந்தா தேவி கடைசியாக மாரிமுத்து - சரவண பிரியா தம்பதியிடம் பேசியது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இறுதியில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பிருந்தா தேவியைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிருந்தா தேவியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளமிட்டுள்ளனர். வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.