நள்ளிரவில் அதிர்ச்சி... தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்; காவலர்கள் மீது தாக்குதல்!
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து வலிப்பு வந்தது போல் நடித்துக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேக்கம்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் ஒருவர், நள்ளிரவில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்துக் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கண்டு பதறியடித்துக் கதவைத் திறந்து உதவிக்கு வந்த 4 சிறைக் காவலர்களை, உள்ளிருந்த கைதிகள் திடீரெனத் தாக்கிவிட்டுச் சிறை வளாகத்திலிருந்து தப்பியோடினர்.
தப்பியோடிய கைதிகளைத் தேடும் பணியில் உடனடியாகச் சிறைத்துறையினரும் போலீசாரும் ஈடுபட்டனர். சிறையின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பிரவீன் என்ற கைதியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்குச் சென்ற தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தப்பியோடிய மீதமுள்ள 16 கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.