அதிர்ச்சி.. காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வனக்காவலர்..!!

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி வனப்பகுதியில் காவலாளியை வனக்காவலர் துப்பாக்கியால் சுட்டதில் சனிக்கிழமை இரவு (அக். 28) உயிரிழந்தார். உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி - சுருளியாறு மின் நிலையம் செல்லும் வழியில் வெட்டுக்காட்டுக்கு செல்லும் காட்டுப்பாதை உள்ளது. இந்த பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. சனிக்கிழமை குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அய்யர் மகன் ஈஸ்வரன் (55) என்பவர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு காவல் காப்பதற்கு சனிக்கிழமை இரவு சென்றார். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த வனவர் திருமுருகன் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது என்று மறுத்துள்ளார். 

கையில் அரிவாள் வைத்திருந்த ஈஸ்வரன் அவரை வெட்ட முயலவே, வனவர் திருமுருகன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஈஸ்வரன் வலதுபுறம் வயிற்றில் குண்டு பாய்ந்து, உயிரிழந்துள்ளார். இதுபற்றி வனவர் திருமுருகன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இரவு சம்பவ இடத்தை உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் ராமநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் உயிரிழந்த ஈஸ்வரன் சடலத்தை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் உயிரிழந்த ஈஸ்வரன் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை கொண்டு வர வேண்டும் என்று மறியல் செய்ய முயன்றனர். தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.லாவண்யா பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தார். இந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.