அசாமில் அதிர்ச்சி... மனைவி, 2 குழந்தைகளை வெட்டிக் கொன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்!

 

அசாம் மாநிலத்தில் நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட விரக்தியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டம் ஜோனாய் நகரின் தெலம் பஜாரைச் சேர்ந்தவர் கம்சுக் தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சினுவாரா பேகம் (33). இவர்களுக்கு ஷகீல் அலி (8), ஐந்து வயது ரிஜிகா பேகம் மற்றும் 13 வயதில் மூத்த மகள் ஒருவர் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு ஆசிரியர் வீட்டில் இருந்தபோது, குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் அவர் தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவரது 13 வயது மூத்த மகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனக்கு மாதம் ரூ.10,000 மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும், இந்தத் சிறிய தொகையைக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடி காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.