பெங்களூரில் அதிர்ச்சி... கூகுள் ஜெமினி உதவியுடன் மூவர் கொடூரக் கொலை!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நிதிப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி 'கூகுள் ஜெமினி' ஏஐ செயலியைப் பயன்படுத்தியிருப்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கென்னத் என்ற வாலிபர், நிதி நெருக்கடி காரணமாகத் தனது காதலியின் பெற்றோர் மற்றும் அவரது தங்கையைத் திட்டமிட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.
இந்தத் தொடர் கொலையை அரங்கேற்றுவதற்காக, கென்னத் கடந்த 6 மாதங்களாக 'கூகுள் ஜெமினி' ஏஐ சாட்பாட்டிடம் மறைமுகமான பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் திட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது. கொலையைச் செய்து முடித்த பிறகு, வீட்டிலிருந்த பெருந்தொகை பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிக் கொண்டு, கென்னத் தனது காதலி ஸ்வேதாவுடன் தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், தப்பியோடிய கென்னத் - ஸ்வேதா ஜோடியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குற்றவாளி கென்னத் கூகுள் ஜெமினி ஏஐ தளத்தில் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்டு உத்தியைத் திட்டமிட்டார் என்பதற்கான முழு ஆதாரங்களைச் சேகரிக்கக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காகக் குற்றவாளியின் முழு 'ஏஐ அரட்டை வரலாற்றை' முறைப்படி வழங்கி உதவுமாறு கோரி கூகுள் நிறுவனத்திற்குப் பெங்களூர் காவல்துறையினர் அதிகாரப்பூர்வக் கடிதம் எழுதியுள்ளனர்.