பெங்களூரில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 504 பேர் மீது வழக்குப்பதிவு!

 

பெங்களூரு நகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மதுபோதை மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடந்த 14-ம் தேதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நகர் முழுவதும் தீவிரச் சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இக்காலக்கட்டத்தில் காவல்துறையினர் 32 ஆயிரத்து 322 வாகன ஓட்டிகளை வழிமறித்துப் பரிசோதனை செய்தனர். இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது உறுதியான 504 பேர் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 205 ஓட்டிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.