பெங்களூரில் அதிர்ச்சி... சோமாட்டோவில் ஆர்டர் செய்த உணவில் பீடித் துண்டு!

 

பெங்களூருவில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலி மூலமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பீடித் துண்டு கிடந்த சம்பவம் நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த பிரியம் என்பவர் சோமாட்டோ செயலி மூலம் பாவ் பாஜி உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது உணவுடன் வழங்கப்பட்ட வெங்காயப் பாக்கெட்டில் பீடித் துண்டு ஒன்று கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இச்சம்பவம் குறித்துப் புகாரளித்த நுகர்வோருக்கு, சோமாட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து விட்டு இழப்பீடாக வெறும் ரூ.100 மதிப்புள்ள கூப்பனை மட்டுமே வழங்கியது.

உணவின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தில் இவ்வளவு பெரிய அலட்சியம் காட்டப்பட்ட நிலையில், அதற்கு இழப்பீடாக வெறும் நூறு ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதா என்று கூறி இணையவாசிகள் சோமாட்டோ நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.