பெங்களூரில் அதிர்ச்சி... தனியார் பள்ளி கழிவறையில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - கர்நாடகாவில் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் ராமநகர் அருகே உள்ள தனியார் பள்ளியொன்றில் 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மைப் பணியாளரைக் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா பகுதிக்குட்பட்ட தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 25-ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகப் பள்ளி கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்குச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி பயந்து சத்தமிட முயன்றபோது, அவரது வாயைப் பொத்திய தூய்மைப் பணியாளர், இச்சம்பவம் குறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.
பயந்து போன சிறுமி அழுது கொண்டே தனக்கு நடந்த கொடுமை குறித்து வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். ஆசிரியர் உடனடியாகச் சம்பவத்தைத் தலைமை ஆசிரியரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்த பெற்றோரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கனகபுரா காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தூய்மைப் பணியாளரைத் தீவிரமாகத் தேடி நேற்று கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும், ஓய்வு நேரத்தில் தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாகச் சுத்தம் செய்யும் பணிகளைச் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.