பெங்களூருவில் அதிர்ச்சி.. நடுரோட்டில் பெண்ணிடம்  தாலி பறிப்பு - எதிர்த்துப் போராடிய தெருநாய்!

 

பெங்களூருவில் பால் வியாபாரம் செய்து வரும் பெண் ஒருவரிடம் மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது அங்குச் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று குற்றவாளியை எதிர்த்துக் கடிக்க முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெங்களூரு தொட்டபிடாரகல்லு பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் விஜயம்மா என்ற பெண், புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் தனது பணிகளை முடித்துவிட்டு தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஸ்கூட்டரில் அவரைப் பின்தொடர்ந்து வந்த இருவரில் ஒருவன் திடீரென இறங்கி, விஜயம்மாவைப் பின்னால் இருந்து கொடூரமாகத் தாக்கித் தரையில் தள்ளினான். அவர் பயத்தில் அலறியபோதிலும், அந்த நபர் அவரது கழுத்தில் இருந்த 25 கிராம் எடையுள்ள தாலிச் சங்கிலியை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டான்.

விஜயம்மாவின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியிலிருந்த தெருநாய் ஒன்று, உடனடியாக ஓடிவந்து கொள்ளையனைக் கடித்துத் தடுக்க முயற்சி செய்தது. எனினும் நாயின் முயற்சியையும் மீறி அந்த மர்ம நபர்கள் நகையுடன் வாகனத்தில் தப்பிச் சென்றனர். இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட விஜயம்மா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பிச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.