பெங்களூரில் அதிர்ச்சி... தேர்வு மையத்தில் மாணவர்களின் ‘பூணூல்’ அகற்றம்... 3 அதிகாரிகள் கைது!

 

கர்நாடக மாநில உயர்கல்வித் துறை நடத்தும் பொது நுழைவுத் தேர்வின் (CET-2026) போது, பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவர்களின் பூணூல் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இயற்பியல் மற்றும் கணிதத் தேர்வுகளின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரு கிருபாநிதி கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவர்களைச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர்கள் அணிந்திருந்த கம்மல் மற்றும் கையில் கட்டியிருந்த கயிற்றை அகற்றச் சொன்னதோடு, சட்டையினுள் அணிந்திருந்த 'பூணூலையும்' கழற்றிவிட்டு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

"உலோகப் பொருட்கள் தடை செய்யப்பட்டதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் மத அடையாளமான பூணூலை அகற்றச் சொன்னது மனவேதனையை அளிக்கிறது" எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். இதேபோன்ற புகார்கள் பிதார் மற்றும் சிவமோகா மாவட்டங்களிலும் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் வாக்குவாதத்தை உருவாக்கியுள்ளது.

"சித்தராமையா அரசு திட்டமிட்டே இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. தாலி மற்றும் பூணூல் போன்ற புனித அடையாளங்களைத் தொடர்ந்து குறிவைத்து அகற்றுவது கண்டிக்கத்தக்கது" என எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் சாடியுள்ளார்.

மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் இது குறித்துக் கூறுகையில், "அரசின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க யாராவது திட்டமிட்டுச் செய்தார்களா என விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, மடிவாலா போலீசார் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக (BNS பிரிவுகளின் கீழ்) வழக்குப் பதிவு செய்தனர்.

மாணவர்களைப் பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு மேற்பார்வையாளர் சுதீர், உதவியாளர் சரிதா மற்றும் கிரிஜா ஆகிய மூன்று ஊழியர்களை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். சர்ச்சையில் சிக்கிய அந்த மூன்று அதிகாரிகளையும் கிருபாநிதி கல்லூரி நிர்வாகம் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டில் மத அடையாளங்களை அகற்ற வேண்டும் என எவ்வித விதியும் இல்லை. அதிகாரிகள் விதிகளின் தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.