பெங்களூருவில் அதிர்ச்சி... “நீ என் தங்கம்.. பேபி!” - பெண் ரவுடிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பெண் ரவுடி ஒருவருக்குக் காவல் ஆய்வாளர் வாட்ஸ்-அப்பில் ஆபாச குறுந்தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

பெங்களூரு கோனனகுண்டே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ரவுடி யசஷ்வினி பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். யசஷ்வினி மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தன்னைப் பற்றிய வழக்குகளைக் காரணம் காட்டி இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக யசஷ்வினி குற்றம் சாட்டியுள்ளார். புகாருடன் அவர் சமர்ப்பித்துள்ள ஆடியோ ஆதாரங்களில், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, யசஷ்வினியை "யஷ் நீ என் தங்கம்", "பேபி" எனச் செல்லமாக அழைப்பதும், ஆபாசமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. 

தன்னை 'இன்ஸ்பெக்டர்' என்று அழைக்காமல் "பாப்பு" என்று அழைக்க வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். அதற்கு யசஷ்வினி மறுக்கவே, "அப்படி மறுத்தால் வீட்டுக்கு வந்து உதைப்பேன்" என மிரட்டியுள்ளார். இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவேன் எனப் பாப்பண்ணா மிரட்டியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா, யசஷ்வினியிடம் முத்தம் கேட்டு ஆபாசமாகப் பேசும் ஆடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு காவல் அதிகாரி,  குற்றவாளி ஒருவருடன் இவ்வளவு நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசியிருப்பது துறை ரீதியான நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஆதாரங்களைப் பரிசீலித்து இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா மீது கமிஷனர் சீமந்த்குமார் சிங் விரைவில் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண் ரவுடிக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையேயான இந்த "ஆபாச ஆடியோ" விவகாரம் பெங்களூருவில் பேசுபொருளாக மாறியுள்ளது.