சென்னை அதிர்ச்சி.. சினிமா ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் - 6 பேர் கைது!
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சாலையை மறித்து நின்ற கும்பலைத் தட்டிக் கேட்ட சினிமா ஊழியரை, மர்மக் கும்பல் ஒன்று துரத்திச் சென்று வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் பகுதியில் சினிமா ஊழியரான சஞ்சய் என்பவர் சென்று கொண்டிருந்தபோது, அங்குச் சாலையை மறித்து நின்ற சில நபர்கள் பொதுமக்களுக்கும் இடையூறாக நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட சஞ்சய் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களுடன் சஞ்சய்யை இருசக்கர வாகனங்களில் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாகக் கத்தியால் வெட்டியது. இந்தத் தாக்குதலில் அவரது தலை மற்றும் நெற்றியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
ரத்த வெள்ளத்தில் சரிந்த சஞ்சய் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சையும் அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்துத் திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் ஆசிக், பாலா, பாலாஜி உள்ளிட்ட 6 பேரை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற சிலரைத் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.