சென்னையில் அதிர்ச்சி... குறி கூறி மயக்கி 24 வயது இளம்பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்த சாமியார்!
சென்னை ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் குறி கூறி வந்த சாமியார் ஒருவர், 24 வயது இளம்பெண்ணை மயக்கி 3-வதாகத் திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி காவல் நிலையத்தில் அளித்துள்ள பரபரப்புப் புகார் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (45). இவர் அந்தப் பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்குக் கடந்த 2008-ஆம் ஆண்டு கவுசல்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர்.
சாந்தகுமார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குறி சொல்லும் தொழிலைச் செய்து வந்துள்ளார். இந்தத் தொழிலைப் பயன்படுத்திப் பல பெண்களுடன் அவர் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவிக்குத் தெரியாமல் 2-வதாக வேறு ஒரு பெண்ணையும் சாந்தகுமார் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரண்டு மனைவிகள் இருந்த சூழலிலும் சாந்தகுமாரின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அண்மையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் பூசாரி சாந்தகுமாரிடம் குறி கேட்பதற்காக வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் குடும்பச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட சாந்தகுமார், தனது குறி சொல்லும் சாதுரிய வார்த்தைகளால் அவரைத் தன்வசப்படுத்தி மயக்கியுள்ளார். பின்னர், முதல் இரண்டு மனைவிகள் இருக்கும் விபரங்களை மறைத்து, அந்த 24 வயது இளம்பெண்ணை 3-வதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கணவனின் இந்த அடுத்தடுத்த அடுக்கடுக்கான திருமண விபரங்களை அறிந்து அதிர்ச்சியடைந்த முதல் மனைவி கவுசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் சாந்தகுமார் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "என் கணவருக்குப் பல பெண்களுடன் தவறான தொடர்புகள் உள்ளன. தற்போது குறி சொல்லி மயக்கி 24 வயது இளம்பெண்ணை 3-வதாகத் சட்டவிரோதமாகத் திருமணம் செய்துள்ளார். எனவே, எங்களையும் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சீரழித்த என் கணவர் மீது போலீசார் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் மனைவியின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, ஆவடி அனைத்து மகளிர் போலீசார் சாமியார் சாந்தகுமார் மீது மோசடி மற்றும் பிகமி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடும் பணியிலும் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.