சென்னையில் அதிர்ச்சி... ஆயுதப்படை காவலர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை!

 

சென்னை பரங்கிமலை ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் துப்பாக்கிச் சுடும் தளம் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (29). ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், காவல்துறையில் தனது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த சில காலங்களாகத் தனது முதுகுத்தண்டில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த உடல் வலியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அவர், மீனம்பாக்கம்-திரிசூலம் துப்பாக்கிச் சுடும் தளம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீனம்பாக்கம் காவல்துறையினர், மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த அஜித்குமாரின் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர் உடல்நலக் குறைவு காரணமாக காவலர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.