சென்னையில் அதிர்ச்சி.. வீடியோ காலில் கல்லூரி மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்து மிரட்டிய உடற்பயிற்சியாளர்!

 

சென்னை ஓட்டேரி பகுதியில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த கல்லூரி மாணவியை தன் கட்டுப்பாட்டில் வைத்து, வீடியோ கால் மூலம் ஆபாசமாகப் படம் பிடித்துத் தனிமையில் வரும்படி மிரட்டிய உடற்பயிற்சியாளரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவி ஒருவர், கடந்த 2024-ம் ஆண்டு அப்பகுதியிலுள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்துள்ளார். அங்கு பயிற்சியாளராகப் பணிபுரிந்த ஓட்டேரியைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப் (27) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

மாணவியின் ஆடை மற்றும் நடத்தை மீது இம்தியாஸ் ஷெரிப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியதால், அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் பழகுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் மாணவி பேச மறுத்ததால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டித் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், கட்டாயப்படுத்தி வீடியோ காலில் அழைத்து மாணவியை ஆபாசமாகத் தோன்றச் செய்து, அதனைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.

அந்த ஆபாச வீடியோவைக் காட்டி மாணவியைத் தன்னுடன் தனிமையில் வருமாறு அவர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உடற்பயிற்சியாளர் இம்தியாஸ் ஷெரிப்பைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.