கோவையில் அதிர்ச்சி... மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொன்ற 17 வயது சிறுவன் கைது!
கோவையில் 58 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் 17 வயதுச் சிறுவனைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை பகுதியில் வசித்து வந்த 58 வயது மூதாட்டியின் வீட்டிற்குள், மதுபோதையில் 17 வயதுச் சிறுவன் ஒருவன் அத்துமீறி நுழைந்துள்ளான். மூதாட்டிக்கு அந்தச் சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அப்போது மூதாட்டி சத்தம்போட்டு கூச்சலிடவே, பயந்துபோன சிறுவன் அருகில் இருந்த மரக்கட்டையால் மூதாட்டியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையை மறைக்க எண்ணிய அந்தச் சிறுவன், மூதாட்டியின் செல்போனைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். இது குறித்து வழக்குப்பதிவு செய்த உள்ளூர் காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பியோடிய 17 வயதுச் சிறுவனை அடையாளம் கண்ட போலீசார், அவரை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.