கோவையில் அதிர்ச்சி.. மயக்க மருந்துக் கொடுத்து இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்; நண்பர் கைது!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், 33 வயதுடைய பெண் வீடியோ எடிட்டர் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துக் கூட்டுப் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர், சொந்தமாக அலுவலகம் எடுத்து வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்குக் கடந்த 2019-இல் திருமணமாகி 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2023 முதல் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இப்பெண்ணின் அலுவலகத்திற்குப் பக்கத்து அறையில் தங்கியிருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மரிய ராபின் (28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த ஒரு வருடமாகப் பழகி வந்துள்ளார். ஆனால், சமீபத்தில் அந்தோணி மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்றுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தோணி மரிய ராபின், திருச்சியைச் சேர்ந்த தனது நண்பரான கிரிஷ் சாமுவேல் குமார் (30) என்பவருடன் அந்தப் பெண்ணின் அலுவலகத்திற்குச் சமாதானம் பேசுவதற்காக வந்துள்ளார். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, திட்டமிட்டபடி அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளனர். அதைத் குடித்துப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண் மயக்கம் தெளிந்து அழுதபோது, தாங்கள் பலாத்காரம் செய்ததைச் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறி இருவரும் மிரட்டியுள்ளனர். "இனிமேல் திருமணம் செய்யக் கோரி வற்புறுத்தினாலோ அல்லது காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம்; உன்னையும் உனது 4 வயது மகனையும் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டிவிட்டுத் தப்பியுள்ளனர்.
மிரட்டலுக்கு அஞ்சாத அந்தப் பெண், நேற்று இரவு கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படிப் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலிசார், கூட்டுப் பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவில் மறைந்திருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். மேலும், இக்குற்றச்சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான தலைமறைவாக உள்ள அந்தோணி மரிய ராபினைப் பிடிக்கப் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.