டெல்லியில் அடுத்தடுத்து அதிர்ச்சி... தொழிற்சாலை தீ விபத்தில் புகை மூட்டத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு!

 

டெல்லி மங்கோல்புரியில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொழிற்சாலையின் அடித்தளப் பகுதியில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. தீ மளமளவெனப் பரவியதால் கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

View this post on Instagram

A post shared by The Hindu (@the_hindu)

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைக்குள் பரவிய அடர்ந்த புகையே உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.