கர்நாடகாவில் அதிர்ச்சி... காயமடைந்த சிறுத்தையை மீட்கச் சென்ற வனத்துறை அதிகாரியைத் தாக்கிய சிறுத்தை!

 

கர்நாடக மாநிலம் தாவணகெரே நெடுஞ்சாலையில் கார் மோதிப் படுகாயமடைந்த நிலையில் கிடந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பொழுது எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை அந்தச் சிறுத்தை தாக்கியுள்ளது.

தாவணகெரே நெடுஞ்சாலைப் பகுதியில் கார் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுத்தை ஒன்று தவித்து வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த ஆபத்தான வனவிலக்கைப் பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். சிறுத்தையைக் கட்டுப்படுத்த அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும், அந்தச் சிறுத்தை முழுமையாக மயக்கமடைவதற்கு முன்பாகவே திடீரென ஆக்ரோஷமடைந்து, மீட்புக் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியது.

இதனைத் தொடர்ந்து, மிகுந்த சிரமத்திற்கு இடையில் அந்தச் சிறுத்தை பத்திரமாக மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்த விலங்கைக் காப்பாற்றச் சென்ற போது வனத்துறை அதிகாரியே தாக்குதலுக்குள்ளான இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.