கரூரில் அதிர்ச்சி... சிறுவர்களைப் பயன்படுத்தி பைக் திருடிய வழக்கில் இளம்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

 

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் சிறுவர்களைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களைத் திருடி விற்ற வழக்கில் கைதான பெண்ணுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரவிந்த் மற்றும் சிவக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான பைக்குகள் அடுத்தடுத்துத் திருடப்பட்டன. இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண், சிறுவர்களை மூளைச்சலவை செய்து அவர்களைப் பைக் திருடப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுவர்கள் திருடிவரும் பைக்குகளைப் பெற்று அவர் வெளிப்படையாக விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் உறுதியானது.

இதனையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஜோதி மீதான வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஜோதிக்குத் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.