கேரளாவில் அதிர்ச்சி.. கார் பானட்டில் டோல்கேட் ஊழியரை இழுத்துச் சென்ற கொடூரம்.. பதற வைக்கும் சிசிடிவி வீடியோ!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள சுங்கச்சாவடி ஒன்றில், கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க முயன்ற சொகுசு கார் ஒன்று, தன்னைத் தடுக்க முயன்ற டோல்கேட் ஊழியரைத் தனது காரின் பானட்டில் ஏற்றி ஆபத்தான முறையில் இழுத்துச் சென்ற திடுக்கிடும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பந்தீரங்காவு சுங்கச்சாவடியில் கடந்த சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சுங்கச்சாவடி வழியே சென்ற கார் ஒன்று, தனக்கு முன்னால் முறைப்படி கட்டணம் செலுத்திவிட்டுச் சென்ற ஒரு காரை ஒட்டி, தானும் கட்டணம் செலுத்தாமல் தப்பிப்பதற்காக மிக வேகமாகப் பின்தொடர்ந்து நுழைந்துள்ளது.
பின்னால் வந்த கார் சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை என்பதைத் திரையில் கண்டறிந்த டோல்கேட் ஊழியரான மேத்தல் ஜிதேஷி என்பவர், உடனடியாகக் காரின் குறுக்கே புகுந்து அதை நிறுத்த முயன்றார். ஆனால், கார் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகம் எடுத்ததால், நிலைதடுமாறிய ஊழியர் ஜிதேஷி காரின் முன்பக்க பானட்டின் மீது விழுந்து அதில் சிக்கிக் கொண்டார். அப்படியிருந்தும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் ஊழியருடன் சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளார்.
#WATCH | கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார்...தடுத்த ஊழியரை பேனட்டில் வைத்து 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கார் ஓட்டுநரால் பரபரப்பு#keralam #tollgate #cctv #News18TamilNadu pic.twitter.com/Szo5HqsRYW
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 28, 2026
இதனைப் பார்த்துக் அதிர்ச்சியடைந்த சுங்கச்சாவடியின் சக ஊழியர்கள், காரை நோக்கிப் பின்தொடர்ந்து ஓடிச்சென்று அதனை மறித்து நிறுத்தினர். கார் நின்றவுடன், காரில் வந்த பயணிகளுக்கும் டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், பின்னர் அது பெரிய அளவிலான கைகலப்பாகவும் மாறியது. காரில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநர், "எங்கள் காரின் பானட்டை நீங்கள் சேதப்படுத்த முயன்றீர்கள்" என்று கூறி, ஊழியர் ஜிதேஷியை மீண்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்த மோதலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பந்தீரங்காவு போலீசார் விபரங்களைச் சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து இருதரப்பும் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது காரை வழிமறித்து, வேண்டுமென்றே காரின் முன்பகுதியை அடித்துச் சேதப்படுத்தியதாகக் காரில் வந்தவர்கள் புகார் தந்துள்ளனர்.
கட்டணம் செலுத்தாமல் விதிமீறலில் ஈடுபட்டதுடன், தங்களது ஊழியர் ஜிதேஷியைக் காரை ஏற்றிப் படுகாயப்படுத்தி, பின்னர் இறங்கி வந்து தாக்கியதாகச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த டோல்கேட் ஊழியர் ஜிதேஷி சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து, இரண்டு புகார்களின் மீதும் உரிய விசாரணை நடத்தி உண்மைத் தன்மையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பந்தீரங்காவு போலீசார் தெரிவித்துள்ளனர்.